சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek சமீபத்தில் வெளியிட்ட AI தொழில்நுட்பத்தை பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்படுத்த உலகெங்கும் பல நாடுகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த AI தொழில்நுட்பத்தில் பகிரப்படும் தரவுகள் சீன அரசாங்கத்திற்கு கசிய வாய்ப்பு இருப்பதால் தங்கள் நிறுவனங்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளது.

குறிப்பாக அரசாங்கங்களுடன் தொடர்புடைய “நூற்றுக்கணக்கான” நிறுவனங்கள், டீப்சீக்கிற்கான அணுகலைத் தடுக்க வேலை செய்து வருகின்றன என்று சைபர் நிறுவனமான ஆர்மிஸின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி நாதிர் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளார்.

வலைத்தளங்கள் மற்றும் பிற சேவைகளுக்கான ஊழியர்களின் அணுகலைக் கட்டுப்படுத்த நிறுவனங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் பாதுகாப்பு நிறுவனமான நெட்ஸ்கோப்பின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதேபோல் இணைப்புகளைக் கட்டுப்படுத்த நகர்கின்றனர்.

ஆர்மிஸ் வாடிக்கையாளர்களில் சுமார் 70 சதவீதம் பேர் தடைகளை கோரியுள்ளதாகவும், 52 சதவீதம் பேர் நெட்ஸ்கோப் வாடிக்கையாளர்கள் தளத்திற்கான அணுகலை முற்றிலுமாகத் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

DeepSeek இன் சொந்த தனியுரிமைக் கொள்கையின்படி, நிறுவனம் அதன் AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காக பயனர்களின் விசை அழுத்தங்கள், உரை மற்றும் ஆடியோ உள்ளீடு, பதிவேற்றிய கோப்புகள், கருத்து, அரட்டை வரலாறு மற்றும் பிற உள்ளடக்கங்களைச் சேகரிக்கிறது, மேலும் அந்தத் தகவலை சட்ட அமலாக்கம் மற்றும் பொது அதிகாரிகளுடன் அதன் விருப்பப்படி பகிர்ந்து கொள்ளலாம்.

இதில் முக்கியமாக, சீனாவில் உள்ள சேவையகங்களில் தரவைச் சேகரித்து சேமித்து வைப்பதாக டீப்சீக் அதன் சொந்த தனியுரிமை விதிமுறைகளில் கூறுவதும், இந்த விஷயத்தில் எந்தவொரு சர்ச்சையும் சீன அரசாங்கச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் சீன தேசிய பாதுகாப்புச் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவை, குறியாக்க விசைகளை அணுகவும் (encryption keys), உளவுத்துறை சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் சீன அரசாங்கத்தை அனுமதிக்கின்றன என்று அமெரிக்க நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

TikTok விஷயத்தில் அமெரிக்கா இதுபோன்ற ஒரு நெருக்கடியை சந்தித்ததாக அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

இந்த நிலையில், உலகெங்கும் பல நாடுகளில் சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek சமீபத்தில் வெளியிட்ட AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு நிறுவனங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்கள் தடை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.