சென்னை: ராமோஜி பிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  மேலும் பிரதமர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரித்துள்ளனர்.

மூத்த பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளர், ஈநாடு குழும நிறுவனங்கள் மற்றும் ராமோஜி குழுமத்தின் தலைவருமான 88 வயதாகவும்   சி.எச். ராமோஜி ராவ்  உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை  காலமானார்.    வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  நிலையில், சிகிச்சை பலனின்றி  இன்று (சனிக்கிழமை)  அதிகாலை 4 மணிக்கு காலமானார். 1974 இல் முன்னணி தெலுங்கு மொழி நாளிதழான ஈநாடு தொடங்கினார். திரைத்துறை, கல்வி, நாளிதழ் என பல்துறை சாதனையாளரான ராமோஜி ராவுக்கு 2016 இல் இந்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.

மறைந்  ராமோஜி ராவ் உடல் மருத்துவமனையில் இருந்து எடுத்துவரப்பட்டு ஹைதராபாத் புறநகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சி.எச். ராமோஜி ராவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரம் முதல்வராக பொறுபேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,  ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பத்ம விபூஷன் திரு ராமோஜி ராவ் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ராமோஜி ராவ் காரு, ராமோஜி குழுமத்தின் தொலைநோக்கு நிறுவனர். ஊடகம், பத்திரிகை மற்றும் திரைப்படத் துறைக்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கும் பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளன. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.