டில்லி
பணத்தட்டுப்பாட்டால் தீபாவளி விற்பனை 40% குறைந்துள்ளதாக அகில் இந்திய வர்த்தகர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
பணமதிப்புக் குறைவுக்குப் பின் மக்களில் பலரிடம் பணப் புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. அதன் எதிரொலி தீபாவளி விற்பனையில் நன்கு தெரிகிறது. இந்திய நகரங்களில் தீபாவளி விற்பனை அமோகமாக நடந்து வருவது வழக்கம். ஆனால் பல நகரங்களில் விற்பனை நன்கு நடப்பதாக தென்பட்டாலும் சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.
இது குறித்து அகில இந்திய வர்த்தகர் சங்கம் தெரிவிக்கையில், “தீபாவளி பண்டிகை மிக நெருங்கி வரும் இந்த வேளையில் நாட்டின் பல நகரங்களில் பண்டிகைக்கால விற்பனை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. வட இந்தியாவின் பல நகரங்களில் கடைகளுக்கு வருபவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்ற வருடம் இதே நேரத்தில் இருந்த விற்பனையை விட தற்போது 40% குறைவாக விற்பனை ஆகிறது. இது மக்களிடம் பணப் புழக்கம் இல்லாததையே காட்டுகிறது.
இது தவிர ஜி எஸ் டி மூலம் பல பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. ஜி எஸ் டி யில் அடிக்கடி திருத்தம் செய்யப்படுவதால் வாடிக்கையாளரும், வர்த்தகர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதுவும் விற்பனை குறைய ஒரு காரணமாக இருக்கலாம்” என கவலையுடன் கூறி உள்ளது.