சென்னை: தீபாவளி திருநாளை முன்னிட்டு வரும் 26ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று சனிக்கிழமை முதல் தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் ரயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய வழித்தடங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
தற்போது தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் வரும் 26-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான முன்பதிவுகள் வரும் 24-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து வரும் அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். பின்,
கொல்லத்திலிருந்து அக்டோபர் 26-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இதேபோல், திருச்சியில் இருந்து அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 27-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.
தஞ்சாவூரில் இருந்து அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 9.50க்கு புறப்படும் ரயில் மறுநாள் நாள் காலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 27-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 6 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்
இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.