சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், ஜவுளி, நகைக்கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தி உள்ள மாநில அரசு , அதை கண்காணிக்கும் பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், வணிக நிறுவனங்கள் சமூக இடைவெளி உள்பட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க, முககவசம், சமூக இடைவெளி, கை கழுவுவது போன்றவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என, மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
சென்னையில் உள்ள வணிக நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க, அதிகாரிகளுக்கு, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பண்டிகை காலம் என்பதால், சனி, ஞாயிற்றுகிழமைகளில், வணிக நிறுவனங்களில் கூட்டம் அலைமோதும். அதுவும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரர் பகுதிகளில் அதிகளவில் மக்கள் கூடுவர் என்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கூறிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில் உள்ள கடைகளில், அதிகளவு மக்கள் கூடும் இடங்களை கண்டறிந்து, அங்கு, சமூக இடைவெளி கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் கடைக்குள் வந்து சென்ற பின், மற்றவர்களை அனுமதிக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் விதியை கடைப்பிடிக்கின்றனரா என்பதை கண்டறிய, கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, மாநகராட்சி, வருவாய், சுகாதாரத்துறை மற்றும் போலீசாருடன் இணைந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். விதிமீறிலில் ஈடுபடும் கடைகளுக்கும், ஒரு மாதத்திற்கு திறக்க தடை விதிப்பதுடன், மூடி சீல் வைக்கப்படும் என்றனர்.