அகர்தலா,
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று ஜிம்னாஸ்டிக் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ காரை திருப்பி கொடுத்து பணம் தரும்படி கேட்டிருக்கிறார் தீபா கர்மாகர்.

கோச்சுடன் தீபா கர்மாகர்
கோச்சுடன் தீபா கர்மாகர்

நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் நான்காவது இடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் தீபா கர்மாகர்.
ஐதாராபாத் பேட்மிண்டன் சங்கத்தலைவர் சாமுண்டேஸ்வரநாத், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோருடன் தீபா கர்மாகருக்கும் சேர்த்து பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்தார்.
இந்த பரிசை இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சச்சின் கையால் பரிசாகப் பெற்ற பிஎம்டபிள்யூ காரை திருப்பிக் கொடுக்க தீபா கர்மாகர் முடிவு செய்திருக்கிறார்.
சச்சினுடன் தீபா கர்மாகர்
சச்சினுடன் தீபா கர்மாகர்

இதுகுறித்து தீபா கர்மாகர் தந்தை துலல் கர்மாகர் கூறியதாவது:
“நாங்கள் வசிக்கும் அகர்தலா பகுதியின் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால் இந்த காரை சரிவர பராமரிக்க முடியவில்லை. அதனால் இந்தக் காரை கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒரு காரை வாங்க முடிவு செய்திருக்கிறோம் என்றும்,
நாங்கள் வசிக்கும் பகுதியில் காரை ஓட்ட முடியவில்லை என்று ஐதாராபாத் பேட்மிண்டன் சங்கத்திற்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து விட்டோம். மேலும் காருக்கு பதிலாக பணமாகக் கொடுத்து விட முடியுமா? என்று கேட்டோம். அவர்களும் தருவதாக ஒப்புக் கொண்டனர். தற்போது அந்த பணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்றார்.