சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, விமான நிறுவனங்கள் பல்வேறு விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இன்று மட்டும், சென்னையில் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்ததால், பெரும்பாலான விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, பிப்ரவரி 17ந்தேதி முதல் அனைத்து விமான சேவைகளும், கொரோனா நெறிமுறைகளுடன் இயங்க மத்தியஅரசு அனுமதி வழங்கியது. அதன்படி, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து ஒரு நாளுக்கு வருகை, புறப்பாடு என 270 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. பயணிகள் எண்ணிக்கையும் நாளொன்றுக்கு 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை இருந்தது.
ஆனால், கடந்த 10 நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பயணிகள் அனைவரும் தகுந்த இடைவெளி, கிருசிநாசினி, கட்டாயமாக முகக் கவசங்கள் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் இல்லையேல் அவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமைப்படுத்தியது.
இதனால், சென்னை உள்பட தமிழகம் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இதைத்தொடர்ந்து, போதிய பயணிகள் இல்லாததால், இன்று 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, காலை 6.15 மணி அகமதாபாத், காலை 6.30 மணி புனே, காலை 6.50 மணி மும்பை, காலை 7.40 மணி சீரடி, காலை 9.05 மணி கொச்சி, காலை 10 மணி பெங்களூா், மாலை 5.20 மணி சூரத், இரவு 9.20 மணி டில்லி ஆகிய எட்டு புறப்பாடு விமானங்களும், எட்டு வருகை விமானங்களும் என மொத்தம் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 109 புறப்பாடு விமானங்கள், 111வருகை விமானங்கள் என மொத்தம் 220 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன என சென்னை விமான நிலையம் தெரிவித்து உள்ளது.