அயோத்தியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சுமார் 3800 அலங்கார மின்விளக்குகள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2024 ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்த அயோத்தி ராமர் கோயில் பின்னர் பொதுமக்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டது.

ராமர் கோயில் திறப்புவிழாவுக்காக கோயிலுக்குச் செல்லும் ‘ராம் பாதை’ கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.

வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் ராமர் பாதையில் பல்வேறு இடங்களில் படுகுழிகள் ஏற்பட்டு கட்டுமானங்கள் பல்லிளித்து வழியத் தொடங்கியது.

இந்த நிலையில் ராமர் பாதை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் அமைக்கப்பட்ட 6400 அலங்கார விளக்குகள் மற்றும் 96 போகஸ் விளக்குகளில் பலவற்றைக் காணவில்லை என்று விளக்குகளை நிறுவிய யாஷ் எண்டர்பிரைசஸ் மற்றும் கிருஷ்ணா ஆட்டோமொபைல்ஸ் கடந்த ஆகஸ்ட் 9 ம் தேதி அயோத்தி காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

மார்ச் மாதம் 19ம் தேதி வரை அனைத்து விளக்குகளும் இருந்ததாகவும் பின்னர் மே மாதம் 9 ம் தேதி ஆய்வு செய்தபோது பல விளக்குகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளது.

3800 அலங்கார விளக்குகள் மற்றும் 36 போகஸ் விளக்குகளை காணவில்லை என்ற புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அடையாளம் தெரியாத திருட்டு நபர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.