ஐதராபாத்:
பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் இறந்தவரின் உடல் ஒன்று சிதைந்த நிலையில் காணப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தஉடல் கடந்த 2016ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டவர் உடல் என்பது தெரிய வந்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா, கடந்த சில வருடத்துக்கு முன், தெலங்கானாவில் உள்ள பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில், 40 ஏக்கர் கொண்ட விளைநிலத்துடன்கூடிய பண்ணை வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீடு பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டே இருந்தது.
இங்குள்ள இடத்தில் ஆர்கானிக் விவசாயம் செய்யலாம் என்று விரும்பிய நாகர்ஜுனா அதற்கான பணிகளை தொடங்கும் வகையில் அவரது மனைவி அமலாவை அங்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு பணியாட்களுடன் வந்த அமலா, அங்கு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். அப்போது ஒரு இடத்தில் இருந்து நாற்றம் வருகை அறிந்து அங்கு சென்று பார்த்தபோது, இறந்தவரின் உடல் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த தெலுங்கானா போலீசார் மிகவும் சிதைந்த நிலையில் இருந்த உடலைக் மீட்டு, சிஆர்பிசியின் 174 வது பிரிவின் கீழ் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான வழக்கை போலீசார் பதிவு செய்திருந்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து கூறிய காவல்துறையினர், இறந்த நபரை அடையாளம் காண தொடர்ந்து முயன்று வருகிறோம், காணாமல் போனவர்களின் விவரம் சேகரிப்பட்டுவருகிறது என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அங்கு இறந்து கிடந்தது யார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. இறந்தவர் 30 வயதுடைய சாகலி பாண்டு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் 2016 ல் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து கூறிய துணை போலீஸ் கமிஷனர் பிரகாஷ் ரெட்டி உடலின் அருகே மீட்கப்பட்ட பர்ஸில், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் இருந்தது. அதைவைத்து அடையாளம் காணப்பட்டது என்று தெரிவித்து உள்ளர். மேலும், இறந்த நபர் அருகே உள்ள பாபிரெடிகுடா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது, அவரது விடு காஷ்மேட் காவல் நிலையத்திற்கு அருகில் இருப்பதும் தெரிய வந்ததாக கூறியுள்ளார்.
இந்த விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.