சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறுத்தியது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது.
கடந்த அதிமுக ஆட்சியில், ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்றும், செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுடுகாடு, கழிவறைகளில் கூட அம்மா மினி கிளினிக்குகள் உள்ளன என கடுமையாக விமர்சித்ததுடன், அந்த திட்டம் தற்காலிகமானது மட்டுமே என்று கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வேண்டுமென்றா அம்மா மினி கிளினிக் குறித்து அமைச்சர் அவதூறாக பேசுகிறார் என கூறினார்.
இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், உங்கள் கட்சிசார்பில் யாராவது வந்தால், ஆதாரத்துடன் நேரில் அழைத்து சென்று அமைச்சர் காட்டுவார் என்று கூறினார்.