லாஸ்ஏஞ்சலிஸ்: ‘டெத் ‍வேலி’ என்று உலகெங்கும் அறியப்படும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்த ‘மரணப் பள்ளத்தாக்கு’, கடந்த ஞாயிறன்று, ஒரு நூற்றாண்டின் அதிகபட்ச வெப்பத்தைப் பதிவு செய்தது.

அமெரிக்க நாட்டின் தேசிய பருவநிலை சேவை அமைப்பு இதை உறுதிசெய்தது.

ஆகஸ்ட் 16ம் தேதியான ஞாயிறன்று மதியம், மரணப் பள்ளத்தாக்குப் பகுதியில் 54.4 டிகிரி செல்சியஸ் அல்லது 130 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்த வெப்ப அளவுதான், கடந்த ஒரு நூற்றாண்டின் வெப்பநிலை அளவுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம்!

கடந்த 1913ம் ஆண்டிற்கு பிறகு, தற்போதுதான் வெப்பநிலை 130 ஃபாரன்ஹீட் என்ற அளவை, மரணப் பள்ளத்தாக்கு எட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் அப்பகுதியின் வெப்பநிலை 129 ஃபாரன்ஹீட் என்ற அளவில் எட்டியதே அதிகபட்ச வெப்பஅளவாக இதற்குமுன் இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.