டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் இன்று 40வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில் கடும்குளிர் மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. இது போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மோடி தலைமையிலான அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லி மாநில எல்லையில் வடமாநில விவசாயிகள், போராட்டம் நடத்தி வருகின்றனர். வடமாநிலங்களில் தற்போது கடுமையான குளிர் வாட்டி வருகிறது. மேலும் டெல்லியில் மழை பெய்து வருகிறது. இருந்தாலும், கடுமையான குளிரிலும், மழையிலும் இரவு–பகலாக வெட்டவெளியிலேயே கூடாரங்கள் அமைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டம் இன்று 40வது நாளை எட்டியுள்ளது.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே 6 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும், உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று 7 ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.‘
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் இறப்பும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி உயிரிழப்பதாகவும் தற்போது வரை போராட்டத்தில் கலந்துகொண்ட 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும் பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைட் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்தியஅரசுதான் பொறுப்பு என்றும், இதற்கு மத்தியஅரசு பதில் அளிக்க வேண்டியது கடமை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.