பாட்னா:

ஸ்ஸாம் மற்றும் பீகார் மாநிலத்தை நிலைகுலைய செய்து வரும் கனமழை, வெள்ளத்தின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்து உள்ளது.

வட மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அரியானா, அஸ்ஸாம், பஞ்சாப், பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் அன்றாடக வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கரையோர பகுதி  மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அதுபோல, நமது அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காரணமாக  பீகார் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து ஆற்றின் கரையோரம் வசித்து வந்த சுமார் 1 லட்சம் கிராம மக்களை மாநில அரசு வெளியேற்றி பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைத்துள்ளது.

கனமழை காரணமாக அஸ்ஸாம் மாநிலத்தின் சுமார் 43 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. மேலும், 1லட்சம் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு  இருப்பதாகவும்,   பர்பேட்டா மாவட்டம் மிகுந்த பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஸ்ஸாமில் பாயும், பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்,  பல கிராமங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள்  நீரில் மூழ்கி நாசமாகி உள்ளதாகவும் பொதுமக்கள் கூறி உள்ளனர். மேலும்,அஸ்ஸாமின் கஜிரங்கா தேசிய பூங்காவும் தண்ணீரில் சிக்கி உள்ளதால், அங்குள்ள ஏராளமான மிருகங்கள் உயிரிழந்து உள்ளதாகவும், சுமார் 90 சதவிகித பகுதி நீரில் மூழ்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அஸ்ஸாம் முதலமைச்சர் சோனாவால் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்த முதல்கட்டமாக அஸ்ஸாம் மாநிலத்தில் மீட்பு பணிகளுக்கு என 251 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவித்துள்ளது.

அங்கு மத்திய அரசு மீட்பு பணிகளுக்கு ராணுவத்தினரை அனுப்பியுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவத்தினரும் மீட்பு பணிகளை தொடங்கியுள்ளனர்.

அசாம் மற்றும் பீகாரில் மட்டும் மழை தொடர்பான பாதிப்புகள் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்து உள்ளதாகவும்   தகவல் வெளியாகி உள்ளது.