பூரி
ஒரிசாவில் அடித்த புயலால் பலியானோர் எண்ணிக்கை 64 ஐ எட்டியது.
ஒரிசா மாநிலத்தில் வீசிய ஃபனி புயல் கடந்த 43 வருடங்களில் வீசிய புயல்களில் மிகவும் கடுமையானது ஆகும். இந்த புயலில் 5.08 லட்சம் வீடுகள் பாதிப்பு அடைந்துள்ளன. சுமார் 250 கிமீ வேகத்தில் அடித்த புயலால் 16000 கிராமங்களில் உள்ள 1.4 கோடிப் பேர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த புயல் சேதம் குறித்த தற்போதைய விவரங்கள் இவை ஆகும்.
வரும் 15 ஆம் தேதி முதல் இந்த புயல் சேதம் குறித்த முழு கணக்கெடுப்பு நடக்க உள்ளது. ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்த சேதம் குறித்து கணக்கெடுக்க பல சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட கணக்கெடுப்பில் விடுபடக்கூடாது என அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்த புயலால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 64 ஐ எட்டி உள்ளது.
முதல்வர் நவீன் பட்நாயக் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.650 கோடி, மீன் மற்றும் விலங்குகளுக்கான நிவாரண தொகையாக ரூ.600 கோடி, கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.100 கோடி மற்றும் சிறு வீடுகளில் வசிப்போருக்கு ரூ. 200 கோடி என நிவாரண தொகைகளை அறிவித்துள்ளார். வீடிழந்தோருக்கு பாதுகாப்பான புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.
பல இடங்களில் மின் கம்பங்கள் அடியோடு சரிந்துள்ளதால் அவைகளை சரி பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. மாநில அரசு வரும் 12 ஆம் தேதிக்குள் அதாவது இன்றைக்குள் முழு அளவில் மின்சார வசதி அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது. நிவாரணப்பணிகள் மெதுவாக நடப்பதால் அதிருப்தி அடைந்த மக்கள் மின்சார வசதி கோரி ஒரு சில இடங்களில் சாலை மறியல் நடத்தி உள்ளனர்.