சென்னை:

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்கவி என்ற 23 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி  டிரெக்கிங் எனப்படும் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற குழுவினர், திரும்பி வரும்போது, காட்டுத்தீயில் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயமுடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த தீவிபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஏற்கனபே 11 பேர் உயரிழந்த நிலையில், நேற்று  சென்னையை சேர்ந்த பார்கவி என்பவரும் பரிதாபமாக உயரிழந்தார்.

இவர்  73 சதவிகிதம் தீயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மதுரையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, மேல் சிகிச்சைக்காக சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், நேற்று பார்கவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து  குரங்கணி தீ விபத்தின் கோர பிடியில் சிக்கி உயரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.