சென்னை

சென்னையில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொன்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

`

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி, கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருந்த சத்யபிரியா என்ற மாணவியை ரெயில் முன்பு தள்ளி சதீஷ் என்ற இளைஞர் கொலை செய்தார். சத்யபிரியா இறந்த துக்கத்தில் அவர் தந்தையும் மரணம் அடைந்தார்.

இந்த கொலை ஒருதலைக் காதல் விவகாரத்தால் நடந்ததாக தகவல் வெளியானது. கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. காவலர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த 27-ந்தேதி சதீஷை குற்றவாளி என நீதிமன்றம் கூறி, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 30-ந்தேதி(இன்று) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இன்று கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. அந்த மாணவியை பின் தொடர்ந்து தொல்லை அளித்த பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.