உத்தரப் பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்கில், கணவன்-மனைவி இருவருக்கும் மரண தண்டனை விதித்து POCSO சிறப்பு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக சிறுவர்களை ஏமாற்றி, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, அந்த காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் விற்பனை செய்ததாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கின் விவரங்களின்படி, ராம் பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகியோர் 2010 முதல் 2020 வரை பாண்டாவில் வசித்து, அருகிலுள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களை குறிவைத்து கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

5 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் இவர்களுடைய உறவினர்களே என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ், பணம், மொபைல் போன் போன்றவற்றை காட்டி வீட்டிற்குள் அழைத்துச் சென்று, பின்னர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதுடன், அந்த செயல்களை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவு செய்துள்ளனர்.

இந்த பதிவுகளை குறியாக்கப்பட்ட இணைய தளங்கள் மற்றும் டார்க் வெப் மூலம் பல நாடுகளுக்கு விற்பனை செய்ததாகவும், அந்த காட்சிகள் 47 நாடுகளுக்கு பரவியிருக்கலாம் என்றும் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இது அரிதில் அரிதான வழக்கு” எனக் குறிப்பிட்டு, குற்றவாளிகள் திருந்தும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படாவிட்டால், நீதித்துறையின் மீது சமூகத்தின் நம்பிக்கை பாதிக்கப்படும் என்றும், குழந்தைகளில் அச்சம் அதிகரிக்கும் என்றும் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

இந்த வழக்கில் குழந்தைகள் அளித்த வாக்குமூல்கள் முக்கிய ஆதாரமாக அமைந்தன. பல சிறுவர்கள் ஒரே மாதிரியான விவரங்களுடன், தங்களுக்கு ஏற்பட்ட துயர அனுபவங்களை நீதிமன்றத்தில் விளக்கினர்.

“சொன்னால் கொன்று விடுவேன்” என்று மிரட்டி, நீண்ட காலமாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சிலர், ராம்பவனின் மனைவியும் இந்தச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாகவும், அவருக்கு எல்லாம் தெரிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனைகளிலும், குழந்தைகள் மீது தொடர்ந்து பாலியல் வன்முறை நடந்ததற்கான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதேபோல், வீடியோ, புகைப்படங்கள், கேமரா, பென் டிரைவ், மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களும் இந்த வழக்கில் முக்கிய பங்காற்றின. குற்றவாளி உருவாக்கிய மின்னஞ்சல் கணக்குகள் மூலம் இந்தக் காட்சிகள் பகிரப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு 2020ஆம் ஆண்டு சர்வதேச காவல் அமைப்பான Interpol வழங்கிய தகவலின் பேரில் வெளிச்சத்துக்கு வந்தது.

பாண்டா மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மொபைல் மற்றும் ஐ.பி. எண்ணில் இருந்து குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பரவுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வு நிறுவனம் (CBI) விசாரணை தொடங்கியது.

அக்கம்பக்கத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், ராம்பவன் மற்றும் துர்காவதி குறித்து பொதுவாக நல்லவர்கள் என்றே கூறப்பட்டாலும், அந்தப் பகுதியில் வசிக்கும் சிறுவர்களுடன் அவர்களுக்கு இருந்த நட்பு மற்றும் சிறுவர்கள் அவர்கள் வீட்டிற்கு சென்று வருவதாகக் கிடைத்த தகவலை ஆராய ஆரம்பித்தனர்.

இதில், ஹை-ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷனுடன் வீட்டிற்குள் பிளேஸ்டேஷன் வைத்திருந்ததும் சிறுவர்களை பிளேஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விளையாடுவதும் அங்கிருந்த சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து உள்ளூர் காவல்துறை உதவியுடன் ராம்பவன் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்த கம்ப்யூட்டர்களில் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசாரிடம் வசமாக சிக்கியதை அடுத்து விசாரணைக்கு ஒத்துழைத்த ராம்பவன் தம்பதியினர் நாங்கள் தான் இந்த வீடியோக்களை எடுத்து பதிவேற்றினோம் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்ற ரேஞ்சுக்கு பதிலளித்துள்ளனர்.

இதுதொடர்பாக 2020 நவம்பர் மாதத்தில் ராம் பவன் கைது செய்யப்பட்டார். பின்னர், சாட்சிகளை அழிக்க முயன்றதாக அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார்.

CBI சுமார் 700 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் 74 பேரின் வாக்குமூலங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனையில், நூற்றுக்கணக்கான ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகையும் குழந்தைகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதற்கிடையில், குற்றவாளிகள் தரப்பில் இருந்து தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளாக நடைபெறுவதாகக் கூறப்படும் இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக பெற்றோர் முன்பே புகார் அளிக்காதது உள்ளிட்ட பல அம்சங்களில் சந்தேகம் இருப்பதாக அவர்களது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு, குழந்தைகள் பாதுகாப்பு, இணைய குற்றங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதைக் கடுமையாக நினைவூட்டும் ஒரு சம்பவமாக பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]