ராஜஸ்தான்:
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் அரசும் பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டதிருத்தம் கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்திருத்த மசோதாவை அரியானா மாநிலஅரசு, மத்தியப் பிரதேச மாநில அரசு நிறைவேற்றி உள்ள நிலையில் தற்போது ராஜஸ்தான் சட்டமன்றத்திலும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, பாலியல் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையானது 14 ஆண்டுகள் மட்டுமல்ல என்றும், ஆயுள் முழுவதும் அவர்கள் சிறையைவிட்டு வெளியே வர முடியாது என்றும், 12 வயதுக்குள் உள்ள குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் ஜி.சி.கட்டாரியா தெரிவித்துள்ளார்.