கவுகாத்தி:
அஸ்ஸாம் மாநில வன உயிரியல் பூங்காவில் இருந்த ஒற்றை கொம்புள்ள ஆண் காண்டாமிருகம் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து அந்த பூங்காவின் கோட்ட வன அலுவலர் தேஜாஸ் மாரிசாமி கூறுகையில், ‘‘இந்த பூங்காவில் இருந்த வயதான காண்டாமிருங்களில் இறந்த பிஷ்னு என்ற காண்டாமிருகமும் ஒன்று. இன்னும் சில நாட்களில் தனது 34வது பிறந்தநாளை கொண்டாட இருந்த சமயத்தில் பிஷ்ணுவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2016ம் ஆண்டில் ஏற்பட்ட வயிற்றுபோக்கு காரணமாக அவதிப்பட்டு வந்த பிஷ்ணுவுக்கு மலக்குடல் வெளியே வந்து பெரும் அவதிக்குள்ளானது. அதற்கு வெளிப்படையான வலி இருந்தபோதும் அது நம்பிக்கையை கைவிடவில்லை. கால்நடை மருத்துவர்கள் மலக்குடலை உள்ளே செலுத்த ஒரு ஆபத்தான, அரிதாக வெற்றி பெறக் கூடிய ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘இதன் பின்னர் பிஷ்ணுவுக்கு செரிமான செயல்பாடு நன்றாக இருந்தது. ஆனால், அது தனது பற்களை இழக்க தொடங்கியது. தொடர்ந்து மீண்டும் மலம் கழித்தலில் பிரச்னை ஏற்பட்டது. அதன் பற்கள் அதற்கு பயனற்று போனது. வாயில் சுரக்கும் அமிலம் மூலமே புல்லை மென்று ஜூஸை மட்டும் குடித்துவிட்டு, சக்கையை துப்பியது. சில நாட்களில் இதையும் நிறுத்திக் கொண்டது. அதன் பிறகு தான் அது அபாய கட்டத்தை அடைந்தது. 2 மாதங்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்தது.
எனினும் கடந்த டிசம்பர் வரை பிஷ்ணு நல்ல ஆரோக்கியத்துடவ் இருந்தது. குளூக்கோஸ் பாட்டில்களை பூங்கா ஊழியர்கள் குச்சியின் உதவியுடன் தூக்கி பிடித்துக் கொண்டு அதை நடமாட செய்து கொண்டே குளுகோஸ் செலுத்தப்பட்டது. முன்பை விட நல்ல நிலைக்கு வந்தது. வனத்தில் எப்படி இருக்குமோ அதே போன்று இருந்தது. வழக்கமாக காண்டாமிருகங்கள் 40 ஆண்டுகள் உயிர் வாழும். அது உடல் அளவிலும், மனதளவிலும் வலுவாகவே இருந்தது’’ என்றார்.
‘‘பூங்காவில் இருக்கும் 3 ஆண், 3 பெண் காண்டாமிருகங்களில் இரு காண்டாமிருகங்களுக்கு பிஷ்ணு தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பெண் காண்டாமிருகத்துக்கு தற்போது 14 வயதாகிறது. இத தான் மூத்தது. இளையது ஆண் காண்டாமிருகம். அதற்கு 6 வயதாகிறது.
அஸ்ஸாம் 55 சதவீத ஒற்றை கொம்புடைய காண்டாமிருகங்களின் புகலிடமாக உள்ளது. இதில் 2 ஆயிரத்து 400 காண்டாமிருகங்கள் கழிரங்கா தேசிய பூங்காவில் உளளது. மீதமுள்ளவை கவுகாத்தியில் இருந்து 200 கி.மீ., கிழக்கு பகுதியில் உள்ளது. ஏற்கனவே 2 முறை மரணத்தின் பிடியில் இருந்து பிஷ்ணு தப்பியது’’ என்றார் மாரிசாமி.
இந்த ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் மரணம் வன உயிரின ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.