Death from overwork: Japan’s ‘karoshi’ culture blamed for young man’s heart failure

 

ஜப்பானில், அதிக வேலைப்பளு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணியாற்றிய 34 வயதே ஆன ஜப்பானியர் ஒருவர், அண்மையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட போது, வாரத்திற்கு 110 மணி நேரம் அவர் வேலை பார்த்தது தெரிய வந்தது. நாளைக்கு 8 மணி நேரம் என்ற கணக்குப்படி ஒரு நாள் ஓய்வு போக, 48 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால், இத்தகைய ஓய்வு எதுவுமே இல்லாமல் இரண்டு மடங்கை விட அதிகமான மணி நேரங்கள் அவர் வேலை பார்த்துள்ளார். இதன் விளைவே, மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இதனை, ஜப்பான் தொழிலாளர் நல அமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது.

 

இதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் அதிக வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்து கொள்வதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

பணியாளர்களின் வேலைப்பளு, மற்றும் வேலை நேரத்தை வரையறுப்பது குறித்து தற்போது ஜப்பான் அரசு பல்வேறு வகையில் ஆலோசித்து வருகிறது.

 

ஒரு மாதத்திற்கு 240 மணி நேரம் (இதுவே கொடூரமானதுதான்) மட்டுமே வேலை செய்ய வேண்டும் என ஜப்பான் அரசு அண்மையில் அறிவித்திருந்தது. உபரி உழைப்பாக அதிக பட்சம் 340 மணிநேரம் வரை உழைக்கலாம் என்றும் வரையறுக்கப்பட்டது. ஆனால், இதனையும் தாண்டி ஜப்பானியர்கள் வேலை பார்ப்பதால், முன்கூட்டியே மரணத்தை தழுவுவது தெரியவந்துள்ளது. அதிக உழைப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கரோஷி என்று பெயரிட்டுள்ளனர்.

 

ஜப்பானில் வேலைபார்க்கும் தமிழர்கள், உழைப்பில் அந்நாட்டவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிப்பதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். சில சமயங்களில் மூன்று நாட்கள் வரை அலுவலகத்திலேயே இருக்க நேரிட்டுவிடும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இந்தியாவைப் போலவே, ஜப்பானிலும் 8 மணிநேரம் தான் வேலை என்றாலும், தகவல்தொழில் நுட்பத்துறைகளில் இந்த வரையறை பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்கின்றனர். இதனால், மனதளவிலும், உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்படும் ஜப்பானியர்கள், ஒரு கட்டத்தில் மாரடைப்பு போன்ற காரணங்களால் உயிரிழப்பதும், தற்கொலைகள் செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. வேலைக்காக அங்கு செல்லும் தமிழர்கள் சிலர், பணிப்பளு காரணமாக, இரண்டு மூன்று மாதங்களிலேயே தாயகம் திரும்பும் நெருக்கடிக்கு ஆளாவதாகவும் பிபிசி வெளியிட்டுள்ள அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

 

சுறுசுறுப்புக்கு ஜப்பானியர்களை உதாரணம் காட்டும் அதே நேரத்தில், அத்தகைய அதீத  உழைப்பால் அவர்கள் தற்போது அடைந்திருக்கும் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!