சென்னை: சென்னையில் மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி. அதன்படி, பொதுமக்கள் அவசர தேவைக்கு 1913-ஐ தொடர்புகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இந்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இந்த மேலும் மேலும் 5 நாட்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பாலிடெக்னிக், ஐடிஐ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணிர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் மழை சேதம் மற்றும் பாதிப்பு குறித்து புகார் அளிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளது என தெரிவித்து உள்ளது.
அதன்படி, மழை பாதிப்பு குறித்து 1913, 044-25619204, 044-25619207 என்ற எண்களை தொடர்புக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னையில், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளது. மழை பாதிப்பு பணிகளுக்காக மொத்தம் 23 பணியாளர்கள் தயாராக உள்ளனர். இத்துடன் ஒவ்வொரு வார்டுகளுக்கும் கூடுதலாக பத்து பணியாளர்கள் என 2000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 10செ.மீ அதிகமாக மழை பெய்தாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், காவல், தீயணைப்புத்துறை என அனைத்து துறை ஒருங்கிணைந்த மீட்பு குழுவும் தயார்நிலையில் உள்ளனர்.
மேலும், 24 மணிநேரம் இயங்கும் கண்கானிப்பு மற்றும் கட்டுபாட்டு அறை மூலம் மாநகராட்சி முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு 1913, 044-25619204, 044-25619207 என்ற எண்களை தொடர்புக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தனது எக்ஸ் பதிவில்,
அன்புள்ள #சென்னைவாசிகளே,
கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு 1913ல் எங்களைத் தொடர்புகொள்ளலாம். #SocialMedia இல் இடுகையிடும்போது, உங்கள் கவலைகளை உடனடியாகத் தெரிவிக்க, #ChennaiCorporation மற்றும் #ChennaiRains என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தவும்.
நாங்கள் #HeretoServe! என குறிப்பிட்டுள்ளது.