டில்லி,
நாட்டின் பிரபலமான ஐஐடியில் உள்ள மாணவர்கள் விடுதியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டில்லி ஐஐடியில் உள்ள ஆரவல்லி மாணவர் விடுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். இங்கு சமீபத்தில் வழங்கப்பட்ட காலை உணவில் எலி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இது மாணவர்களிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த விடுதி நிர்வாகம் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
தனக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் எலி கிடந்ததாக டில்லி ஐஐடியில் பயிலும் ஜெயந்த் தாரோகர் எனும் மாணவர் பேஸ்புக்கில் பதிவிட்டார். அதில், தனக்கு வழங்கப்பட்ட தென்னிந்திய சிற்றுண்டியில், தேங்காய் சட்னியில் சிறிய எலி ஒன்று இறந்து கிடந்ததாக கூறி உள்ளார்.
ஆனால் எலி கிடந்ததை தான் பார்க்கும் முன்னபே பல மாணவர்கள் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டார்கள் என்றும் கூறி உள்ளார். மேலும் இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதுபோன்று ஏற்கனவே, கரப்பான்பூச்சி, பேனா மை, தேனீ ஆகியவற்றை கண்டறிந்து நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்ததாகவும் ஆனால் ஐஐடி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த கல்வி நிறுவனமான ஐஐடியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.