சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தீபாவளிக்கு பாயசம் வைக்க வாங்கிய சேமியா பாக்கெட்டில் செத்துப்போன தவளை இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
தேவகோட்டை பண்ணாரி அம்மன் நகரைச் சேர்ந்த பூமிநாதன் அருகில் உள்ள ராம் நகரில் உள்ள மளிகை கடையில் பிரபல நிறுவனமான அணில் சேமியா தயாரிப்பு சேமியா பாக்கெட்டை வாங்கியுள்ளார்.
வீட்டிற்கு சென்று சேமியா பாக்கெட்டை பிரித்துப் பார்த்ததில் அதில் செத்துப்போன தவளை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடைக்காரரிடம் விசாரித்ததில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் தான் வாங்கி விற்பனை மட்டுமே செய்ததாக கூறினார்.
அதற்குள்ளாக தேவகோட்டை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் சமூக வலைத்தளத்திலும் ஊடகங்களிலும் வெளியானது.
இதனை அடுத்து “தொழிற்சாலையில் தவறு நடக்க வாய்ப்பில்லை” என்று அணில் சேமியா விற்பனை மேலாளர் கூறியுள்ளார்.
சமீப காலமாக கெட்டுப்போன ஷவர்மா, கெட்டுப்போன இறைச்சி, ஆகியவை உணவகங்களில் அதிகரித்து வரும் நிலையில் வட்டார உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து மாவட்ட உணவு அலுவலர்களும் ஊடகங்களை அழைத்துக் கொண்டு சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
இதற்கு மாறாக, உணவு பதப்படுத்தும் ஆலை மற்றும் தொழிற்சாலைகள் பெருகி உள்ள நிலையில் அவற்றில் உள்ள முக்கிய கட்டுப்பாட்டு புள்ளிகள் சரிவர பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்தும் கட்டுப்பாட்டு மாதிரி உள்ளிட்ட பொருட்கள் மீதான சோதனைகளை அதே ஊடகங்களுடன் மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.
தவிர, வட்டார மற்றும் பகுதி உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளை தன்னிச்சையாக செயல்பட வழி ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர்.