சண்டிகர்
அறிவிக்கப்படாத பழங்குடியினர் மற்றும் நாடோடி இனத்தவர் பாஜகவுக்கு எதிராக முன்னணி ஒன்றை தொடங்கி உள்ளனர்
வட இந்தியாவில் பல அறிவிக்கப்படாத பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அதைத் தவிர அவர்களில் பலர் நாடோடிகளாக வசிக்க சரியான இடமின்றி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களில் சாரா, நாத், மதாரி, டாபர் ஆகியோர் முக்க்யமானவர்கள். இவர்கள் மொத்தம் 125 வகுப்பினர்கள் ஆவார்கள். இவர்கள் இந்தியாவில் 14 மாநிலங்களில் உள்ளனர்.
இவர்களில் பலர் தங்கள் வாழ்வாதாரத்துக்காக வசிக்க வீடும் விவசாய நிலமும் தேவை என பல நாட்களாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி அன்று நிதி அயோக் துணை தலைவர் கீழுள்ள குழு ஒன்று இவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவதாக அறிவித்தது.
ஆயினும் இந்த பழங்குடியினர் இதனால் திருப்தி அடையவில்லை. அவர்கள் இந்த குழு கடந்த 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகவும் அடையாள அட்டைகள் வழங்க முடிவெடுக்கவே ஐந்து வருடங்கள் ஆகி உள்ளதாகவும் குறை கூறி உள்ளனர். அது மட்டுமின்றி தங்களுடைய பாதுகாப்பு குறித்து இந்த அரசு சிறிதும் அக்கறை கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுவின் தலைவர் தக்ஷின் சாரா, “எங்கள் இனத்தவர் அனைவரையும் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தின் கீழ் கொண்டு வர அரசு விரும்புகிறது. ஆனால் எங்களில் பெரும்பான்மையானோர் இந்த பிரிவினைரை விட வாழ்க்கை தரத்தில் மிகவும் தாழ்ந்துள்ளனர். எனவே எங்களுக்கு என தனி இனத்தை அறிவிப்பதே எங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.
சுதந்திரம் அடைந்த போது எங்கள் இனத்தில் 200 பிரிவுகள் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய அரசு எங்கள் இனத்தில் 400 பிரிவுகள் உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வேறு சில அறிவிக்கப்பட்ட இனத்தவர்களையும் எங்கள் இனத்தில் சேர்க்க பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக எங்களுக்கு தோன்றுகிறது. இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் வேறு இனத்தவர்களுக்கு பிரித்து அளிக்கப்பட நேரிடலாம். இதுவும் ஒரு வகை பார்ப்பனிய அணுகுமுறை ஆகும்.
பாஜகவின் வலதுசாரி போக்கினால் எங்கள் இனத்தவர்கள் தொடர்ந்து துன்பங்கள் அனுபவித்து வருகிறோம். பல இடங்களில் எங்களை குழந்தைகள் கடத்துபவர்கள் எனக் கூறி தாக்குதல் நடத்தி உள்ளனர். குஜராத்தில் இது போல ஒரு நிகழ்வால் சாந்தி தேவி மதாரி மற்றும் இரு பெண்கள் அகமதாபாத் நகரில் காவல்நிலையம் அருகே கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர். இது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜக வுக்கு எதிராக ஒரு முன்னணியை தொடங்கி உள்ளோம். எங்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ் என எவ்வித ஆவணமும் இந்த அரசு அளிக்க தயாராக இல்லை. இவர்களோடு ஒப்பிடும் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது எங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை விடுத்து இதுவரை கிடைக்காத அம்சங்களை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாங்கள் எங்களுடைய நன்மையை மனதில் கொள்ளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம்” என தெரிவித்துள்ள்ளார்.