டி.டி. தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி தின விழாவில் திராவிடம் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுக்கு மன்னிப்பு கோரியது.
சென்னையில் டிடி தமிழ் தொலைகாட்சி நடத்திய இந்தி தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது அதில் இடம்பெற்ற ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தையை தவிர்த்து விட்டு பாடப்பட்டது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் தொடர்பான வரிகள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசியல் கட்சியினர் தவிர பல்வேறு தமிழ் அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
“திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்.
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்.
அவர் ஆளுநரா? ஆரியநரா?” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கட்டமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம், தமிழையோ அல்லது தமிழ்த் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை இதனால் தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று டிடி தமிழ் தொலைக்காட்சி மன்னிப்பு கோரியுள்ளது.