சென்னை:   சன் குழு தலைவர்  கலாநிதி மாறன் முறைகேட்டில் ஈடுபட்டு, தன்னை ஏமாற்றி உள்ளதாக, கேடி பிரதர்ஸ் என அழைக்கப்படு பவர்களில் ஒருவரான தயாநிதி மாறன், தனது அண்ணன் கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கலாநிதி மாறன்  தரப்பில் சன் டிவி நெட்வொர்க் விளக்கம் வெளியிட்டு உள்ளது.

சன் டிவி பங்குகள் விற்பனை தொடர்பாக, சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனுக்கு, அவரது சகோதரரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று சன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

மோசடி செய்து பங்குகளை கைப்பற்றினார் என தயாநிதி மாறன் தனது அண்ணன் கலாநிதி மாறன் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.  அவரது குற்றச்சாட்டில்,, 2003 ஆம் ஆண்டு சன் டிவி குழும பங்குகள் என்ன நிலையில் இருந்ததோ அதே நிலைமைக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும், அதாவது 2003 ஆம் ஆண்டு இருந்து அசல் நிலைக்கு நிறுவனத்தின் பங்குகளை மாறன் குடும்பம் மற்றும் கருணாநிதி குடும்பத்திற்கும் மத்தியில் சம பங்கு இருப்பு அளவுக்கு மாற்ற வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார். 7 நாட்களுக்குள் இந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என தயாநிதி மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலாநிதி மாறன் தன்னுடைய தனிப்பட்ட நலனுக்காக முழு நிறுவனத்தையும் அதன் சொத்துக்களையும் கையகப்படுத்த மற்ற நபர்களோடு சேர்ந்து ஒரு தந்திரமான திட்டத்தை தீட்டி உள்ளார் என அதில் குற்றம் காட்டியிருக்கிறார். தீவிர மோசடி புலனாய்வு அலுவலகத்தில் இது தொடர்பாக தான் விசாரணையை கோருவேன் என்றும் முறைகேடாக பெற்ற பங்குகள் மூலம் கிடைத்த லாபத்தில் நடத்தப்பட்டு வரக்கூடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமம் குறித்து பிசிசிஐக்கு முறையிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

சன் நெட்வொர்க்  என்பது கிட்டத்தட்ட 24,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு குழுமம். இதன் தலைவராகவும் மேலாண் இயக்குனராகவும் இருப்பவர் தான் கலாநிதி மாறன். அவர் 2003 ஆம் ஆண்டு மோசடி செய்து சன் டிவி நிறுவன பங்குகளை தன் வசப்படுத்தி நிறுவனத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார் என தயாநிதி மாறன் குற்றம் சாட்டியிருக்கிறார்.  இவரின் குற்றச்சாட்டுகள் காரணமாக மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் சன் டிவி நிறுவன பங்கு கடுமையான சரிவைச் சந்தித்தது.

இதையடுத்து, தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக விளக்கமளித்து சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், திமுக எம்.பி தயாநிதி மாறனின்  குற்றச்சாட்டுகள் தவறானவை,  அவதூறானவை மற்றும் ஆதாரமற்றவை என சன் டிவி நெட்வொர்க் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது

மேலும் அந்த கடிதத்தில்,  இது குடும்ப விவகாரம் மட்டுமே எனவும்  தற்போதுள்ள பிரச்சனைக்கும், வர்த்தகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ள சன் டிவி நெட்வொர்க் பங்கு பரிமாற்றத்தில் பின்பற்ற வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.

தயாநிதிமாறனால்  கூறப்படும் பிரச்சனைகள் அனைத்தும் 22 ஆண்டுகளுக்கு முன்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக இருந்தபோது நடந்தவை எனவும் சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் தனது விளக்கக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

‘இந்த ஊடக செய்திகளில் இடம்பெற்றுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை, தவறாக வழிநடத்துபவை, யூகத்தின் அடிப்படையிலானவை மற்றும் அவதூறானவை. ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ள விஷயம் 22 ஆண்டுகளுக்கு முந்தையது. அப்போது இந்நிறுவனம் ஒரு பிரைவேட் லிமிடெட் ஆக இருந்தது,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.