மேற்கு வங்க ரயில் விபத்தில் 15 பேர் பலியான சம்பவம் ரயில்வே துறையின் மோசமான நிர்வாகத்தை வெளிப்படுத்துவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டார்ஜீலிங் அருகே இன்று காலை சென்றுகொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் பலியாகியுள்ளனர், 60 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ள ரயில் பெட்டியில் உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு விரைந்துள்ளார்.

இந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள ராகுல் காந்தி, “காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் பிரார்த்திக்கிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருவது மோடி அரசின் தவறான நிர்வாகம் மற்றும் புறக்கணிப்பின் நேரடி விளைவாகும், இதனால் பயணிகள் ஒவ்வொரு நாளும் உயிர் மற்றும் சொத்துக்களை இழக்கின்றனர். இன்றைய விபத்து இந்த உண்மைக்கு மற்றொரு உதாரணம் – பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த பயங்கரமான அலட்சியத்தை நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, இந்த விபத்துக்களுக்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்” என்றும் பதிவிட்டுள்ளார்.