டெல்லி: மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 20வது நாளை எட்டியுள்ளது. வேளாண் சங்கங்களின் போராட்டத்தால் அரியானாவில் இருந்து டெல்லிக்கு நுழையும் எல்லைப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி சலோ என்ற பெயரில், டெல்லி மாநில எல்லையில் வடமாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மத்தியஅரசு பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடர்ந்து வருகிறது.
19வது நாளான நேற்று மாநில எல்லையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து, பாஜக தலைவர்கள், அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். டெல்லியை ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை போராடும் விவசாயிகள் முற்றுகை இட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தொடரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக, மத்தியஅரசுக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது.