விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று கொச்சை படுத்திய சென்னை டி.ஏ.வி. பள்ளி கருத்து சுதந்திரம், இந்திய அரசியலமைப்பு சட்டம் என்று சால்ஜாப்பு காட்டும் வேலையில் இறங்கி இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடந்த திருப்புதல் தேர்வில்,

“வேளாண் சட்டங்களை கொண்டு வந்த அரசுக்கு எதிராக போராடும் ‘வன்முறை வெறியர்களை’ பற்றி உங்கள் ஊர் பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதவும்” என்று ஒரு கேள்வி கேட்டிருந்தது.

இந்த விவகாரம், சமூக வலைதளங்கள் மூலம் வெளியானதை தொடர்ந்து, இதற்கு விளக்கமளித்து ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கும், டி.ஏ.வி. பள்ளி, இந்த கேள்வியை பள்ளி நிர்வாகம் தயாரிக்கவில்லை, சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தான் தயாரித்துள்ளனர் என்று கூறியுள்ளது. இந்த விளக்கத்தை தங்கள் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் இன்றைய நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் என்றும், ஒவ்வொருவருக்கும் அவரது கருத்தை பதிவு செய்ய இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த கேள்வி குறித்து எங்கள் பள்ளி நிர்வாகிகளுக்கு, பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஆதரவாகவும் அதே நேரத்தில் எதிராகவும் மாறுபட்ட கருத்துகள் வந்துள்ளன என்று விளக்கமளித்துள்ளது. இது மாறுபட்ட நாடு, மாறுபட்ட கருத்துகள் தான் வரும் என்று அதற்கு ஒரு சமாதானமும் கூறியிருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்பின் படி ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்தை பதிய உரிமை உள்ளது என்று கூறும் நிர்வாகம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரலெழுப்பும் விவசாயிகளை வன்முறை வெறியர்கள் என்று கூறி கடிதம் எழுத மாணவர்களை கல்வி நிலையங்கள் ஒருதலை பட்சமாக தூண்டுவதற்கு, எந்த சரத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் தரவில்லை.

மாறுபட்ட கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் கொண்ட பள்ளி நிர்வாகம், மாணவர்களை மட்டும் ஒரே நோக்கில் கடிதம் எழுதுமாறு கேள்வி கேட்டது ஏன் என்றும் அதில் விளக்கம் தரவில்லை.

டி.ஏ.வி. பள்ளியின் இந்த விளக்க கடிதம், கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொள்ளவே வெளியிடப்பட்டிருக்கிறது, இதில் துளியளவும் அவர்கள் வருத்தப்பட்டதாக தெரியவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.