திருவனந்தபுரம்
கேரள உயர்நீதிமன்றம் தனது திருமணச் செலவை தந்தையிடம் இருந்து இந்து மதத்தை சேர்ந்த மகள் வாங்கிக் கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு பெண் தந்தையைப் பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் தந்தை திருமணத்துக்கு எந்த செலவும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது தகப்பனார் திருமணத்துக்காக தான் செலவழித்த ஐந்து லட்சம் ரூபாயை திருப்பித் தரவேண்டும் என குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்தப் பெண்ணுக்கு வாடகையாக மாதம் ரூ.12000 வருவதால் அவர் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளலாம் என்னும் தந்தையின் வாதத்தை ஏற்று குடும்ப நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து அந்தப் பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்திரன், நாராயண பிசாரதி ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அவர்கள் ”இந்து தத்தெடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் படி தந்தைக்கு மகளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய முழு பொறுப்பும் உள்ளது. பொறுப்பு என்றால் அந்தப் பெண்ணின் திருமணத்துக்கும் தந்தைதான் செலவு செய்ய வேண்டும்.
அந்தப் பெண்ணும் அவர் தாயாரும் தனியாக வசிப்பதால் அவர்களுக்கு வாடகையாக வரும் ரூ. 12000 த்தில் அதிகம் சேமிக்க முடியாது. அப்படியே சேமிக்க முடிந்தாலும் சட்டப்படி தந்தை அவருடைய திருமணத்துக்காக செலவிட்ட பணத்தை திருப்பித் தர வேண்டும். ஒரு திருமணத்தை நடத்த ரூ.1 லட்சம் போதுமானது. ஆனால் இந்தப் பெண் தாராளமாக ரூ. 5 லட்சம் செலவழித்துள்ளார். அதனால் இந்தப் பென்ணுக்கு அவர் தந்தை ரூ. 1 லட்சம் உடனடியாக அளிக்க வேண்டும்” என தீரிப்பளித்துள்ளனர்.