அவுரங்காபாத்:
”குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்ற, சார்லஸ் டார்வினின் கோட்பாடு தவறு. அதை , பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும்,” என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, இணை அமைச்சர், சத்யபால் சிங் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று அவுரங்காபாத் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்ததாவது:
“குரங்காக இருந்து, மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி அடைந்து தான், மனிதன் உருவானான் என்ற, சார்லஸ் டார்வின்சியின் ‘மனிதனின் பரிணாம வளர்ச்சி’ கோட்பாடு, முற்றிலும் தவறானது. மனிதன், இந்த பூமியில் உருவான காலத்தில் இருந்தே, மனிதனாகத் தான் இருந்தான். ஒரு குரங்கு மனிதனாக மாறியதை பார்த்ததாக, நம் முன்னோர் எவரும் தெரிவித்ததும் இல்லை.
அந்த காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களிலும், இப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால், டார்வினின் இந்த கோட்பாடு தவறானது. பள்ளி, கல்லுாரி பாடப் புத்தகங்களில் இருந்து, அதை நீக்க வேண்டும்” என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
இவர் முன்பு மும்பை காவல்துறை ஆணையாளராக பொறுப்புவகித்த ஐ.பி.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.