டெல்லி

பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகநடன இயக்குனரான ஜானி மாஸ்டர். தமிழில் அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவலா, மேகம் கருக்காதா உள்ளிட்ட பாடல்களுக்கு நடன இயக்குனராவார். ஜானி மாஸ்டருக்கு சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

நடன கலைஞரான இளம்பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் மீது காவல்துறையிடம் அளித்த புகாரின்படி, ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  எனவே  அவரை தனது ஜன சேனா கட்சியில் இருந்து நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் நீக்கினார்.

தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்தில் இருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  குற்றம் சாட்டியவர் அப்போது சிறு பெண் என்பதால் ஜானி மாஸ்டர் மீது, போக்சோ வழக்கும் பாய்ந்தது. தலைமறைவான ஜானி மாஸ்டரை பெங்களூருவில் கைது செய்த போலீசார், அவரை ஐதராபாத் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைந்தனர்.

தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக நடன இயக்குனர் ஜானிக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் தேசிய விருது வழங்கப்பட இருந்தது.  தற்போது திடீர் திருப்பமாக ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.