டெல்லி: வங்கக் கடலில்  காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது 48 மணி நேரத்தில் டானா புயலாக வலுப்பெறும் என குறிப்பிட்டு உள்ளது. அதே வேளையில் இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. ஐப்பசி மாதம் அடை மழை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், தொடர்ந்து தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,  மத்திய கிழக்கு வங்கக் கடல்,வடக்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகவும், அது அடுத்த இரண்டு நாளில் (48 மணி நேரத்தில்)  புயலாக வலுப்பெற்று,  அக்.24இல் மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையையொட்டி ‘டானா’ புயல் கரையை கடக்கக்கூடும்  என தெரிவித்து உள்ளது. இதற்கு டானா புயல் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக,  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

நாளை மறுதினம் (23-ந்தேதி)  வங்கக்கடலில் டானா புயல் உருவாக வாய்ப்புள்ளது.  இந்த  டானா புயல் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடற்கரையை நோக்கி நகரும்.

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் வலுப்பெறும் டானா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என தெரிவித்துள்ளது.