லக்னோ:

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க இருந்த முஷார் என்ற தலித் மக்களை சோப்பு, ஷாம்பு, சென்ட் கொடுத்து அதிகாரிகள் சுத்தமாகச் சொல்லிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. மாநிலம் முஷார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அங்கு தீண்டத்தகாத மக்களாக கருதப்படுகின்றனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் இவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன் முஷார் ம க்களை சந்தித்த அதிகாரிகள், அவர்களுக்கு சோப்பு, ஷாம்பு மற்றும் சென்ட் ஆகியவற்றை கொடுத்து முதல்வரை சந்திக்கும் போது சுத்தமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர்.

முதல்வர் வருகையை முன்னிட்டு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு தெரு விளக்கு புதிதாக அமைக்கப்பட்டது. மண் சாலைகள் புதிய தார் சாலைகளாக மாற்றப்பட்டது. புதிய கழிப்பிடங்களும் கட்டப்பட்டது.

உ.பி.யில் இது போல் நடப்பது முதன்முறை அல்ல. ஏற்கனவே பல சம்பவங்கள் உதாரணமாக உள்ளது. காஷ்மீரில் உயிர் தியாகம் செய்த தியாகி ஒருவரின் வீட்டிற்கு முதல்வர் யோகி சென்றார். இதற்காக தியாகியின் வீட்டில் புதிய இருக்கைகள், ஏசி மற்றும் புதிய தரை விரிப்புகள் ஆகியவை அதிகாரிகளால் அமைக்கப்பட்டன. அவர் வந்து சென்றவுடன் உடனடியாக அந்த பொருட்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுவிட்டனர்.

மேலும், உ.பி.யில் பெண்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டுகிறது. குற்ற செயல்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று பாஜ தலைவர்கள் தேர்தலில் வாக்குறுதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.