பதான்:

தலித் மாணவனை தேர்வு எழுதவிடாமல் தடுத்து, மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது.

12-ம் வகுப்பு படிக்கும் மிதுன்குமார் நரேஷ்பாய் சவ்டா போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது:

என் சொந்த ஊரான மேசனாவிலிருந்து தினோஜ் கிராமத்தில் உள்ள சர்வஜைனிக் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் தேர்து எழுத அரசு பஸ்சில் பிற்பகல் 1 மணியளவில் சென்றேன்.

தேர்வுக்காக வெளியே காத்திருந்தபோது, அந்த அரசு பஸ் நடத்துனர் என் அருகே வந்து, முக்கியமான வேலை இருக்கிறது. என்னுடன் வா என்றார்.

மற்றொரு நபரை அழைத்துவந்து என்னை வலுக்கட்டாயமாக ஒரு மோட்டார் சைக்களில் ஏற்றிக் கொண்டு ஒரு பண்ணைக்கு சென்றனர்.

அங்கிருந்த நபர் என்னை மரத்தில் கட்டி வைத்து கம்பால் அடித்தார். என்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நீ படிக்கக் கூடாது, வேலைக்கு வா என்றனர் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து மிதுன்குமாரின் தாய் தருணா கூறும்போது, உயர்சாதி பெண்ணை காதலித்ததால் தான், கோபமடைந்த அவர்கள் என் மகனை அடித்ததாக பரவும் வதந்தி தவறானது என்றார்.