சென்னை: தொடர் ஊரடங்கு காரணமாக, பால் பவுடரின் விலை ரூ.60 முதல் ரூ.80 வரை வீழ்ச்சியடைந்துள்ளதால், ஆவின், நந்தினி, அமூல் மற்றும் சராஸ் போன்ற பால் உற்பத்தி நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கிலோ பால் பவுடரின் விலை ரூ.320 என்றிருந்த நிலையில், தற்போது ரூ.240 முதல் ரூ.260 வரை விற்பனையாகிறது. கொரோனா ஊரடங்கால், ஹோட்டல்கள், தேநீர் கடைகள், இனிப்பு கடைகள் உள்ளிட்ட பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், பாலுக்கான தேவை 60% குறைந்தது.
இதனால், தினசரி உற்பத்தி செய்யப்படும் பாலில் 40% முதல் 45% அளவிற்கு பால் பவுடராக மாற்றப்படுகின்றன. இந்த நடவடிக்கையால், பால் பவுடரின் விலையும் 20% முதல் 25% வீழ்ச்சியடைந்துவிட்டது.
கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் மட்டும், தமிழகத்தில் 1.3 கோடி லிட்டர் பால் விற்பனையாகாமல் தேங்கியது. இதனால், தனியார் நிறுவனங்கள், பால் கொள்முதல் விலையைக் குறைத்தன. அரசு நிறுவனமான ஆவினைப் பொறுத்தவரை பால் பவுடர் பகிர்வு ஒப்பீட்டளவில் குறைவாகும்.