விஜயவாடா: முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தினசரி விசாரணை நடைபெறும்  ஆந்திர உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெகன் உள்பட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் மீதான வழக்குகள் மீண்டும் துசிதட்டி எடுக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுஉள்ளது.

இந்த நிலையில்,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெகன் மீதான வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஹரிராம்ஜோகய்யா, தேர்தலுக்கு முன்பே ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அப்போது ஜெகன் மீதான வழக்கை ஏன் தொடர்ந்து விசா ரிக்கவில்லை என்று கேட்ட நீதிமன்றம், வழக்கை தினசரி விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இவ்வழக்கை வரும் 23-ம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது. ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவால் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஜெகன் இனி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்,   கடந்த 2012-ல் கைது செய்யப்பட்டு, 16 மாதங்கள் சிறையில் இருந்தார். பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர் 2014 தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். 2019-ல் நடைபெற்ற தேர்தலில் இவரது கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ஜெகன் ஆந்திர முதல்வராக பதவியேற்றார். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெகன் விலக்கு பெற்றார்.

கடந்த 5 ஆண்டுகளாக  இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. தற்போது,   ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடுமுதல்வராக பதவியேற்றார். தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றிபெற்றதும் ஜெகன் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி இடமாற்றத்திற்கு ஆளானார். இதையடுத்து வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.