கோட்சேவுக்கு பாரத ரத்னா அளிக்க பரிந்துரைத்தாலும் இனி ஆச்சரியப்படுவதற்கில்லை என பாஜக மீது கடுமையான விமர்சனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா முன்வைத்துள்ளார்.
மஹாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டிருந்தது. அதில் வீர் சாவர்க்கருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருதை அளிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம் என்று ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதி தொடர்பாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, ”நாம் வாழும் காலத்தின் மிகப்பெரிய முரண் இதுதான், நாமெல்லாம் மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறோம் ஆனால் மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்கிறார்கள்.
மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது அளிக்க இவர்கள் முன்மொழியும் நாள் வெகுதொலைவில் இல்லை. இது அவர்களின் திட்டத்தின் ஒரு அங்கமாகும். 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மகாராஷ்டிராவில் நடைபெறுகிறது, இதில் 16 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. எங்களது முதன்மைக் குறிக்கோள் பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதே. மக்களை பாஜகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்வோம்” என்று தெரிவித்தார்.