புவனேஷ்வர்: வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறி ஒடிசாவின் இன்று மதியம் பாலசோர் அருகே வங்கக்கடலில் பலத்த காற்றுடன் யாஸ் புயல் கரையை கடந்தது.  இதனால் மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று முன்தினம் இரவு மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி ஒடிசாவை நோக்கி நகர்ந்து வந்தது. இன்று மதியம் வடக்கு ஒடிசா-மேற்குவங்கம் கடற்கரை இடையே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே பாலசோர் அருகே கரையை கடந்தது.

அப்போது மணிக்கு 130 முதல் 155 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. பாலசூர் பகுதியில் 2 முதல் 4 மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழும்பின. யாஸ் புயல் இன்று காலை 4.30 மணியளவில், வடமேற்கு வங்க கடல் பகுதியில் தம்ரா என்ற இடத்துக்கு கிழக்கு 60 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் அந்த பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது.  புயல் காரணமாக ஒடிசாவில் 6 லட்சம் பேரும், மேற்கு வங்கத்தில் 11.5 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம்  புயல் கரையை கடக்கும் போது 130 கி.மீ முதல் 155 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இந்த புயலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். புயல் காரணமாக சாலைகளில் வேரோடு மரங்கள் சாய்ந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீனவர்களின் மீன்பிடி படகுகள் துக்கி வீசப்பட்டு உள்ளன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.  பெட்ரோல் பங்குக்களின் கூரை புயலால் தூக்கி வீசப்பட்டுள்ளது. அதனை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த புயல் காரணமாக மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.