சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்கள் சார்பில், நிவாரண நிதியாக ரூ.1 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 750-ஐ தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினர்.
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் மற்றும் சாத்தனூர்அணை திறப்பு காரணமாக வட மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துஉள்ளன. குறிப்பாக, விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மத்திய குழுவினரும் நேரில் வந்து வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில், வெள்ள நிவாரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார். தொடர்ந்து திமுக எம்.பி.க்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்வரன் நிவாரண நிதிக்கு வழங்கினர். இதைத்தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில், தங்களது சட்டமன்ற உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தலைமைச் செயலகத்தில், அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அவர்களிடம் வழங்கினார்.
அதன்படி, துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகள்/காசோலைகளை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் இன்றையதினம் முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் அவர்கள் உடனிருந்தார்.