எந்த சூழ்நிலையிலும் அதிமுக ஆட்சி கவிழாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், “செல்லும் இடமெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், விரைவில் அதிமுக ஆட்சி கவிழும் என்று கூறி வருகிறார். எந்த சூழ்நிலையிலும், எப்போதும் இந்த ஆட்சி கவிழாது. எதிர்க்கட்சி தலைவர் என்றால் தனது தகுதியை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். முதலமைச்சரை ஸ்டாலின் ஒருமையில் பேசி வருகிறார். இது நியாயமா ?
அதிமுகவினரை கைது செய்வோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். கடந்த திமுக ஆட்சியின் போது கூட்டுறவு வங்கியில் நகைக் கடன், மகளிர் சுய உதவிகுழுக்களுக்கான கடன் என ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி கூறியுள்ளார். மேலும் சி.பி.ஐயிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் யார் கைது ஆவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
திண்டிவனம் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2011ம் ஆண்டில் கொள்ளிடம் – திண்டிவனம் கூட்டு குடிநீர் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அந்த திட்டப் பணிகள் செயல்வடிவம் பெற்று நடைபெற்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.