சென்னை
பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து புது ரூ.2000 நோட்டுக்களாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.33.89 கோடி மணல் விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று பிரபல தொழிலதிபரான சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது அவருடைய இல்லம் மற்றும் அலுவலகங்களில் இருந்து புதிய ரூ.2000 நோட்டுக்கள் பிடிபட்டன. அவற்றின் மதிப்பு ரூ. 33.89 கோடி என அறிவிக்கப்பட்டது. இது வங்கி அதிகாரிகள் உதவியுடன் மாற்றப்பட்ட மோசடிப் பணம் என கூறப்பட்டது.
இதை ஒட்டி சேகர் ரெட்டி மீது மூன்று வழக்குகள் பதியப்பட்டன. அப்போது சேகர் ரெட்டி திருப்பதி தேவஸ்தான ஆணைய உறுப்பினராக இருந்தார். இந்த சோதனை குறித்த தகவல்கள் மற்றும் வழக்குப் பதிவு ஆகியவற்றை காரணம் காட்டி ஆந்திர அரசு சேகர் ரெட்டியை திருப்பதி தேவஸ்தான ஆணையத்தில் இருந்து நீக்கியது.
சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடுத்த மூன்று வழக்குகளில் இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தால் கடந்த வருடம் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் முடக்கப்பட்ட சேகர் ரெட்டியின் சொத்துக்கள் பண மோசடியில் வாங்கப்பட்டது அல்ல என தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் அந்த சொத்துக்களை விடுவிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது.
தற்போது மூன்றாவது வழக்கில் வருமான வரித்துறை அளித்த அறிக்கையில், “சேகர் ரெட்டி தனது எஸ் ஆர் எஸ் மைனிங் என்னும் நிறுவனத்தின் மூலம் மணல் விற்பனை செய்து வந்துள்ளார். சோதனையில் பிடிபட்ட ரூ.33.89 மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்கள் இந்த மணல் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என்பது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ள்ளது. எனவே இது தொழில் மூலம் கிடைத்த வருமானம் ஆகும்” என தெரிவித்துள்ளது.
இது குறித்து சேகர் ரெட்டி, “எங்கள் நிறுவனம் சோதனை நடப்பதற்கு முன்பே அட்வான்ஸ் வரியாக ரூ.31 கோடியை கட்டி உள்ளது. அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் விவரமும் எங்கள் கணக்கு ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆந்திர அரசு என்னை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது மிகவும் மன வருத்தம் அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]