சென்னை: தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு வரும் 22ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் சம்பா, தாளடிபயிர்களை காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சர்வர் பிரச்சினை காரணமாக, குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயிகள் காப்பீடு செய்ய முடியாத நிலை உருவானது. மேலும் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், விவசாயிகள் கடம் அவதி அடைந்தனர். இந்த பயிர் காப்பிடு அவகாசம் நேற்றுடன் (15ந்தேதி) முடிவடைந்தது.
இதனால், பருவமழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, பயிர் காப்பீட்டுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
மத்திய வேளாண் துறை இணை செயலர் ரிதேஷ் சவுகானுக்கு தமிழக வேளாண் ஆணையர் எல்.சுப்பிரமணியன் பயிர் காப்பீட்டுக்கான அவகாசத்தை நவ.30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார்.
இதைத்தொடர்ந்து, பயிர் காப்பீடுக்கான அவகாசம் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்து மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த செப்டம்பர் 15-ம்தேதி தொடங்கிய சிறப்பு மற்றும் ராபி பருவத்துக்கான பயிர்களுக்கு காப்பீடு செய்ய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, திருப்பூர்,கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களுக்கு நவ.22 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் துறை அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சிறப்பு நிகழ்வாக, பயிர் காப்பீட்டுக்கான அவகாசம் நவ.15-ல் இருந்து நவ.22 வரை நீட்டிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இதை முன்னுதாரணமாக கொள்ளக் கூடாது. இந்த காலகட்டத்தில் தேசிய பயிர் காப்பீட்டுக்கான இணையம் செயல்பாட்டில் இருக்கும். பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக வேளாண் துறை செயலர் அபூர்வா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பயிர் காப்பீட்டுக்கான பொது சேவை மையங்கள் நவ.18, 19-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) செயல்படும். எனவே, இதுவரை சம்பா பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் நவ.22-க்குள் பதிவுசெய்து பயனடையலாம். நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.