புதுடெல்லி: வலதுசாரி பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி கைது தொடர்பாக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்த கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
கடந்த 2018ம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், மும்பை காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார் பாரதீய ஜனதா ஆதரவு பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி.
அவரின், கைதுக்கு மோடி அரசின் பல அமைச்சர்கள் விரைந்து வந்து, தங்களின் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். அதில், மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஸ்மிருதி இரானி.
“சுதந்திரமான பத்திரிகையாளர்கள், அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக இந்த சூழலில் குரல் கொடுக்கவில்லை என்றால், அவர்கள், தந்திரோபயமாக ஃபாசிஸத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்” என்றுள்ளார் ஸ்மிருதி இரானி.
அவரின், இந்த வார்த்தைகள் மிரட்டல் போன்று உள்ளதாக விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப்பட்டபோது, மத்திய அமைச்சர்கள் இவ்வளவு விரைவாக முன்வந்து, இந்தளவிற்கு பரவலாக குரல் கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரமான விமர்சனங்களை மோடி அரசின் மீது தெரிவிக்கும் பிரபலங்கள் பலர், மோடி அரசால் தொடர்ந்து கைதுசெய்யப்படுவது அனைவரும் அறிந்ததே.