சென்னை: பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நடிகர் பாக்யராஜ் தடாலடியாக பேசி உள்ளார். ஏற்கனவே அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்தே, கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ள நிலையில், இப்போது நடிகர் பாக்யராஜ் பேசி உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாநில பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் கலந்துகொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசியவர், ”பிரதமர் மோடியை குறை சொல்கிறவர்களை எனக்கு பிடிக்கும். அவரைப் பற்றி குறை சொல்கிறவர்கள் பொதுவாக சொல்வது, மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பது தான். அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு யார் உடம்பில் பலம் இருக்கிறது?

வெளிநாடு சென்றுவந்தவர்கள் இரண்டு, மூன்று நாட்கள் ஓய்வு எடுப்பார்கள். ஆனால் பிரதமர் மோடி வெளிநாடு சென்றுவந்ததும் கோயம்புத்தூரில் ஒரு நிகழ்ச்சி என்றால் உடனடியாக வந்துவிடுவார். அவர் ஓய்வின்றி உழைக்கிறார். அவரது உடம்பை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்கிறார். எந்த பிரதமரால் அவரைப் போல சுறுசுறுப்பாக செயல்பட முடியும். இந்தியாவுக்கு இப்படி ஒரு சக்திமிக்கவர் வேண்டும். இந்தியாவுக்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. mஅவர்  இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்று வியக்கிறேன்.

பிரதமர் பதவியிலிருக்கும்போது பல இக்கட்டான சூழ்நிலைகள் வரும். தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி ஒருபோதும் செவி சாய்ப்பது இல்லை என்று கூறியதுடன், இப்படி பேசினால் ஒருவருக்கு பிடிக்காது, அல்லது மற்றொருவருக்கு சாதகமாக இருக்கும். விமர்சனம் செய்கிறவர்கள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருப்பார்கள். பிரதமர் மோடி விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறார்.

விமர்சனம் செய்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக்கொள்ள சொல்வேன். தாய் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கு 4வது மாதம்தான் காது உருவாகும், 5வது மாதம் வாய் உருவாகும். விமர்சனம் செய்கிறவர்களை 3 மாசத்தில் பிறந்தவர்கள் என்று ஏன் சொல்கிறேன் என்றால், நல்லதை இவனும் பேச மாட்டான். பிறர் சொன்னாலும் காது கொடுத்து கேட்க மாட்டான். விமர்சனம் செய்பவர்களை பிரதமர் இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவுக்கு எதிராக எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது இயக்குனர் பாக்கியராஜ் பேசியுள்ளது  மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.