கேள்வி: ரவுண்டஸ் பாய்   

 

கமல்ஹாசன், ஜெயலலிதா ஆகியோரின்  தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூகவலைதளங்களில் பலரும் விமர்சிக்கிறார்களே…

 

பதில் : ராமண்ணா

ராமண்ணா:

ஆமாம்…!

“நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு குடும்பத் தலைவனுக்கு வேண்டிய தனி மனித ஒழுக்கம் இல்லாததால் அவர் அரசியல் தலைவர் ஆகமுடியாது” என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கூறியிருக்கிறார்.

கமல் – கவுதமி

அதாவது திருமணம் செய்துகொள்ளாமல் நடிகை கவுதமியுடன் கமல் சேர்ந்து வாழ்ந்ததை விமர்சிக்கிறார்.

பதிலுக்கு சிலர், “உங்கள் (அ.தி.மு.க.) தலைவி ஜெயலலிதா, இதே போலத்தானே நடிகர் சோபன்பாபுவுடன் வாழ்ந்தார். இதை ஜெயலலிதாவே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ நானும் சோபன்பாவுவும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்.

திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

சோபன்பாபு – ஜெயலலிதா

சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் – நான்  சோபன்பாவுவோடு தனி  வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்.

கோயிங் ஸ்டெடி வாழ்க்கை” என்று மகிழ்ச்சியுடன் கூறினாரே” என்று சமூகவலைதளங்களில் பதிவிடுகிறார்கள்.

அவரவர் வாழ்க்கையை அவரவரே முடிவு செய்ய வேண்டும்.

ஒரு காலத்தில்  குழந்தைத் திருமணங்கள் நடந்தன. குழந்தைப் பருவம் தாண்டியும் திருமணம் செய்யாவிட்டால் சமுதாயம் அவர்களை கேவலமாக பார்த்தது. இன்றோ, குழந்தைத் திருமணம் செய்துவைத்தால்தான் கேவலமாக பார்க்கிறது சமுதாயம்.

அதே போல கலப்புத்திருணம், மறுமணம் ஆகிவயற்றையும் கேவலமாக பார்த்தது நமது சமுதாயம். இப்போது அப்படி இல்லை.

அது போல வருங்காலத்தில், “ திருமணமே தேவையில்லை. சேர்ந்து வாழலாம்” என்பதையும் சமுதாயம் ஏற்கக்கூடும்.

அவரவர் வாழ்க்கை, அவரவர் விருப்பம்.

ஆகவே ஜெயலலிதா, கமல் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எவரும் பேசாமல் இருப்பதே சரி.