சென்னை: இஸ்லாமியர்களை ‘எச்சச்சோறு’ என விமர்சித்த திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ‘மீது இஸ்லாமிய அமைப்புகள் புகார் கொடுத்துள்ள நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படுவாரா என சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,  இவரது பேச்சு, அருவறுக்கத்தக்க வகையிலும், கொச்சையாகவும், பாலியல் ரீதியாகவும், இருக்கும். இதனால், இவரது பேச்சை ஒரு சிலர் கேட்க மறுக்கும் நிலையில், இளைய தலைமுறையினர் உள்பட பலர் அவரது பேச்சை ரசிப்பது உண்டு.  இவரது பேச்சால் அவர்மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டாலும், ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால், இதுவரை கைது செய்யப்படாமல் தப்பித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில்  கடந்த வாரம் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாமியர்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் முஸ்தபா காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முஸ்தபா , “தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சி குறித்தும், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையிலும் திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி முதல்வர் பிறந்த நாள் நிகழ்வு மேடையில் மிகவும் அவதூறு பரப்பும் வகையில் பேசி உள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இஸ்லாமியத்திற்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ளும் திமுக கட்சி ரீதியாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எதுவும் எடுக்கவில்லை, காவல்துறை சார்பிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மிகவும் அச்சத்துடன் இஸ்லாமியர்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய பாதுகாவலர் என திமுக போலி வேஷம் போட்டு, வஞ்சித்து வருகிறது. த.வெ.க சார்பில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சியில் நோன்பு இருந்து விஜய், கட்சி அல்லாமல் கலந்து கொண்டார்.

இஸ்லாமியர்களை அவதூறு பரப்பும் வகையில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

முன்னதாக, சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில்  நடைபெற்ற  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,  தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகர் விஜய் பற்றி பேசிவிட்டு, ”தொப்பி போட்டு இஸ்லாமியர்கள் எச்சை சோறுகள்” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நோன்பு வைத்துள்ள இஸ்லாமியர்கள் இந்த காணொளியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இன்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வண்ணாரப்பேட்டை ஹெச்-1 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து தவெக கொள்கைபரப்புச் செயலாளர் ராஜ்மோகன், ”நம் வெற்றித் தலைவர் இஸ்லாமிய சகோதரர்களுடன் நோன்பு திறந்ததை தரம்தாழ்ந்து விமர்சித்ததோடு, உச்சமாக, இஸ்லாமிய சகோதரர்களை எச்சசோறு உண்பவர்கள் என்று வரம்புமீறிப் பேசினார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற தரம்கெட்ட பேச்சாளர்களை வளர்த்தெடுக்கும் தி.மு.க. தலைமையின் உள்மனத்திட்டம் இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலம் உமிழப்பட்டிருக்கிறது. அரசியல் நாகரிகம் என்ற சொல்லையே முற்றிலும் மறந்து,துறந்து அநாகரிக அரசியலையே வளர்த்தெடுப்பதுதான் தி.மு.க. தலைமையின் தொன்றுதொட்ட வேலை.

சிறுபான்மை இன மக்களின் பாதுகாவலன் என்று சித்தாந்த வேஷம் போடுவது, மதச்சார்பற்ற கூட்டணி என்று பெயர் மட்டும் வைத்துக்கொண்டு, எல்லா மதங்களையும் கீழ்த்தரமாக தங்கள் ஏவல் பிராணிகளை வைத்து விமர்சிக்கச் செய்வது எல்லாம்தான் தி.மு.க. தலைமையின் உண்மை முகம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு கொடுத்த உரையிலிருந்தவற்றில் சிலவற்றை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் தவிர்த்தது குறித்து கடுமையாக விமர்சனம் செய்திரந்தார்.  விருகம்பாக்கத்தில் நடந்த பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மிரட்டும் தொனியில் அவதூறாக விமர்சித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவின.