2024 நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி 9 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

அதேவேளையில், சிவசேனா என்ற பெயரையும் கட்சி சின்னத்தையும் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே பிரிவு 7 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்ட போது கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை யாருக்கு என்று சர்ச்சை எழுந்த நிலையில் ஷிண்டே பிரிவுக்கு 13 எம்.பி.க்களும் 40 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர்.

உத்தவ் தாக்கரே பிரிவுக்கு 6 எம்.பி. மற்றும் 15 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே இருந்தது. தவிர மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர்கள் உத்தவ் தாக்கரே பக்கமே இருந்தனர். ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் யாரும் ஆதரவு தரவில்லை.

1972 ம் ஆண்டு தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சாதிக் அலி தொடர்ந்த வழக்கில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை மட்டுமே வைத்து முடிவெடுக்காமல் எந்த குழுவுக்கு கட்சியில் பெரும்பான்மை இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு 9 இடங்களில் வெற்றிபெற்று மொத்தம் 95,22,797 (16.72%) வாக்குகள் பெற்றுள்ளது.

https://x.com/arvindgunasekar/status/1801870980408570210

ஆனால், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 73,76,674 (12.95%) வாக்குகள் பெற்று 7 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

இதைவைத்துப் பார்க்கும் போது தேர்தல் ஆணையம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளதாவதும் கட்சியில் பெரும்பான்மை யாருக்கு இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளாமல் கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் விவகாரத்தில் சரியான முடிவை எடுக்கவில்லை என்று தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.