அகமதாபாத்:
அரசு, ராணுவம், நீதித்துறை மீதான விமர்சனங்களை தேசத் துரோகமாகக் கருத முடியாது என்று நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்து உள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் பயிற்சி பட்டரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உச்சநீதி மன்ற நீதிபதி குப்தா “தேசத்துரோகம் மற்றும் கருத்து சுதந்திரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்
. அப்போது, இந்திய குடிமக்களுக்கு அரசாங்கத்தை விமர்சிக்க உரிமை உண்டு, இதுபோன்ற விமர்சனங்களை தேசத்துரோகமாகக் கருத முடியாது. “அரசு நிர்வாகம், நீதித்துறை, அதிகாரத்துவம், ஆயுதப்படைகள் ஆகியவற்றின் விமர்சனத்தை தேசத்துரோகம் என்று சொல்ல முடியாது” என்று கூறியவர், இந்த நிறுவனங்கள் மீதான விமர்சனங்களை நாங்கள் கட்டுப்படுத்தி னால், நாங்கள் ஒரு ஜனநாயகத்திற்கு பதிலாக ஒரு பொலிஸ் அரசாக மாறுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அண்மை காலங்களில் நாட்டில் பேச்சுரிமையை பறிப்பதற்கு தேசதுரோக சட்டத்தை பயன்படுத்தப் படுவது அதிகரித்து வருவதாக அதிருப்தி தெரிவித்தவர், ‘பெரும்பான்மையின் கருத்து எப்போதும் சட்டமாக்கிவிட முடியாது. சிறுபான்மை மக்களுக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது.
தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் அரசு அனைத்து மக்களின் கருத்தை பெற்றது என்று கூற முடியாது. ஏனென்றால் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி 50 சதவிகித வாக்குகளை பெறுவதில்லை. அத்துடன் மாற்று கருத்து தெரிவிப்பவர்களை தேசவிரோதிகள் என குறிப்பிடும் போக்கு அதிகரித்து வருவதாக கவலையளிக்கிறது.
சமூக வலைதளங்களில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை கேலி செய்யும் போக்கு அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க அச்சப்படுகின்றனர். மாற்று கருத்து தெரிவிக்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மிக முக்கிய உரிமை.
ஒரு நபர் சட்டத்தை மீறாமல், வன்முறையை தூண்டாமல் மாற்று கருத்தை தெரிவிக்கவும், அதை பரப்பவும் அனைத்து உரிமையும் உள்ளது.
தேச துரோக சட்டங்கள் வெளிநாட்டினர் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியவர், அப்போதைய ஆட்சியாளர்கள் கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்காகவே இந்த சட்டங்களை கொண்டு வந்தனர். தற்போது அந்த சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியவர், அரசியல் தலைவர்களை விமர்சிப்பது அவதூறு ஆகுமே தவிர தேசத் துரோகம் ஆகாது.
இவ்வாறு நீதிபதி கூறினார்.