டில்லி,
குற்றவாளிகளும், தண்டனை பெற்றவர்களும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தேர்தல் கமிஷனின் பதிலில் திருப்பதியடையாத நீதிபதிகள், தேர்தல் கமிஷனுக்கு அதிரடி கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்காதது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, தேர்தல் கமிஷனுக்கு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தவிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தில்,
அரசியலில் குற்றவாளிகள் இருப்பதை தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. அதேநேரத்தில், தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பதை ஆதரிக்கவில்லை என கூறியுள்ளது.
தேர்தல் கமிஷனின் இரண்டுங்கெட்டான் பதிலால் கோபமடைந்த உச்சநீதி மன்ற நீதிபதி, ரஞ்சன் கோகாய் கூறுகையில், இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் ஏன் தெளிவாக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்று தனது அதிருப்தியை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தனது நிலையை தெளிவுபடுத்த தேர்தல் கமிஷன் மறுக்கிறது என்று கூறிய நீதிபதி, முக்கியமான இந்த விவகாரத்தில் நீங்கள் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.